இன்ஸ்பெக்டர் வாகனத்தை மறித்த ஐஆர்பிஎன் ஏஎஸ்ஐ கைது
திருக்கனூர், அக். 30: திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நலத்திட்ட நிகழ்ச்சிக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பாதுகாப்புக்காக திருக்கனூர் போலீசார் அமைச்சரின் காரின் முன்பு சென்றுகொண்டு இருந்தனர். இதனிடையே செட்டிப்பட்டைச் சேர்ந்த புதுச்சேரி ஐஆர்பிஎன் ஏஎஸ்ஐ கதிரவன் என்பவர் சீருடை அணியாமல் திடீரென அவரது பைக்கில் வேகமாக சென்று அமைச்சருக்கு முன்னால் சென்ற திருக்கனூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வாகனத்தை மறித்து அவரை தகாத வார்த்தையில் திட்டி உள்ளார். பிறகு அங்கிருந்தவர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு உள்துறை அமைச்சர் சென்றவுடன் திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் கொடுத்தப்புகாரின் பேரில் திருக்கனூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா தலைமையிலான போலீசார் ஐஆர்பிஎன் ஏஎஸ்ஐ கதிரவன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர் .