திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்த அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம்
திண்டிவனம், செப். 30: திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசினார். பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. பாமகவினர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சி.வி.சண்முகத்தை திண்டிவனத்தில் உள்ள அவரது இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரமாக சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது ராமதாசிடம் கூட்டணி சம்பந்தமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட சி.வி.சண்முகத்தை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர், தலைவர் ராமதாசை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று காலை திடீரென சந்தித்தார்.
முன்னதாக சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் மகன் அர்ஜூன் திருமண பத்திரிகையை வைத்துவிட்டு ராமதாசிடம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனியாக பேசினார். சுமார் இவர்களின் சந்திப்பு அரை மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சொன்ன தகவல்களை ராமதாசிடம் சி.வி.சண்முகம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் நயினார் நாகேந்திரன் ராமதாசை சந்திப்பார் என பாமக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் ராமதாஸ் செய்தியாளர்களை சந்திக்க இருந்தார். தவிர்க்க முடியாத காரணத்தினால் செய்தியாளர்கள் சந்திப்பு வேறு ஒரு தேதிக்கு மாற்றப்படுவதாக பாமகவினர் கூறினர். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ராமதாசை சந்தித்த பிறகு ராமதாஸ் செய்தியாளர்களை சந்திப்பார் என கூறப்படுகிறது.