திருவக்கரை அருகே கல்குவாரி ெகாத்தனார் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
வானூர், நவ. 29: திருவக்கரை கல்குவாரி குட்டையில் கொத்தனாரை கொலை செய்து தலை, கை மற்றும் கால்களை துண்டித்து உடலை வீசப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான கல்குவாரி தண்ணீரில் கடந்த 23ம் தேதி தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில், உடல் மட்டும் பாலித்தீன் கவரில் கட்டப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இறந்தவர் திருவெண்ணைநல்லூர் சரவணப்பாக்கத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ராஜதுரை(32) என்பது தெரிய வந்தது.
நீதிமன்ற பிடிவாரண்ட் இருந்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிளியனூர் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்ட ராஜதுரை துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு அவரது நண்பர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த தனிப்படை போலீசார் ராஜதுரையின் நண்பர்களான சிவா(22), உதயா(25), மோகன்ராஜ் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில், துக்க நிகழ்ச்சியில் ராஜதுரை தங்களை திட்டியதால் அவரை தடுத்தாட்கொண்டோர் ஏரிக்கரைக்கு வரவழைத்து மது கொடுத்து அடித்ததாகவும், அதில் ராஜதுரை இறந்ததாகவும் கூறியுள்ளனர்.
பின்னர் தங்களின் நண்பரான கலிதீர்த்தாள்குப்பம் பகுதியை சேர்ந்த கார்த்திக்(22) என்பவரின் உதவியோடு, கரும்பு தோட்டத்தில் உள்ள ராஜதுரை உடலை தலை, கை, கால்களை தனித்தனியாகவும், உடலை தனியாகவும் வெட்டி எடுத்து இரு பாலித்தீன் பைகளில் கட்டி திருவக்கரையில் உள்ள கல்குவாரியில் வீசி விட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிவா, உதயா, மோகன்ராஜ், கார்த்திக் ஆகியோரை கைது செய்த போலீசார் இறந்த ராஜதுரையின் வெட்டப்பட்ட தலையையும், இந்த கொலையில் தொடர்புடைய மேலும் சிலரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் ராஜதுரை கொலை வழக்கில் மேலும் ஒருவரான திண்டிவனம் கிடங்கல் 1 பகுதியை சேர்ந்த குமார் மகன் ரெமோ அபி என்கிற அபிலாஷ் (31) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் கொலையாளிகளுக்கு வாகன உதவி செய்ததாக கூறப்படுகிறது.