பள்ளிப்பட்டு ஊராட்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 20 பேருக்கு வாந்தி, மயக்கம்
ரெட்டிச்சாவடி, அக். 29: கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்த 20 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அடுத்த பள்ளிப்பட்டு ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களுக்கு பைப் லைன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இப்பகுதியை சேர்ந்த 15 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த பாலசுந்தரம்(25), நந்தன்(60), வனிதா(43), அழகானந்தம், விஷ்ணு பிரியா உள்ளிட்டோருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்ந்த அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இக்கிராமத்தில் உள்ளவர்களுக்கு திடீரென உடல் உபாதைகள் ஏற்பட என்ன காரணம்? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அப்பகுதி முழுவதும் கழிவுநீர் வாய்க்கால் கீழே குடிநீர் பைப் லைன் சென்றதும், இதனால் பைப்பில் உடைப்பு ஏற்பட்டு அந்த வழியாக குடிநீரோடு கழிவுநீர் கலந்திருப்பது தெரியவந்தது. இதனை சற்றும் கவனிக்காத பொதுமக்கள் கடந்த ஒரு வாரமாக கழிவு நீர் கலந்த குடிநீரையே குடிப்பதுடன், சமையல் செய்வது உள்ளிட்ட அனைத்து பயன்பாடுகளுக்கும் உபயோகித்து வந்துள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்களுக்கு உடல் பாதிப்புகள் ஏற்பட காரணம் என தெரிந்தது. பின்னர் வயிற்றுப்போக்கை தடுக்க மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வீடு வீடாக சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகளை சுகாதாரத்துறையினர் அளித்தனர். அப்பகுதி முழுவதும் தூய்மை பணியாளர்கள் பிளீச்சிங் பவுடர் தெளித்தனர். தொடர்ந்து கசிவை சரி செய்யும் வரை பைப் லைன் மூலமாக வரும் குடிநீரை யாரும் குடிக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியதோடு, பொதுமக்களுக்கு மாற்று ஏற்பாடு மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.