கடலூரில் பரபரப்பு ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் தண்ணீரை ஊற்றி போலீசார் காப்பாற்றினர்
கடலூர், அக். 28: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோலை ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி, ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்களை சோதனை செய்து உள்ளே அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மனு கொடுக்க வந்த பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன், தீக்குளிக்கும் நோக்கத்தோடு திடீரென தான் எடுத்து வந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றினார்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அந்த பெண் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில், பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த பழனிவேலு மனைவி கலைச்செல்வி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை அழைத்து சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வைத்தனர். அந்த மனுவில், எனது கணவர் இறந்த நிலையில், அவரது சகோதரர்கள் எங்களை ஏமாற்றி எங்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து கொண்டனர். அதனை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டிருந்தது. ஆட்சியரிடம் மனு அளித்த பின்னர் அந்த பெண்ணை, போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவததால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.