மரக்காணம் அருகே நடுக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் நியமனத்துக்கு 7 வார்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு
மரக்காணம், செப்.27: மரக்காணம் அருகே நடுக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதையடுத்து தொடர்ந்து அந்த ஊராட்சியின் துணைத் தலைவராக உள்ள சுலோசனா தன்னை ஊராட்சி மன்ற தலைவராக நியமிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். விழுப்புரம் மாவட்ட கிராம ஊராட்சிகளின் உதவி இயக்குனர் மஞ்சுளா பொறுப்பு தலைவராக சுலோசனாவை நியமித்தார். இந்நிலையில் இந்த ஊராட்சியில் உள்ள 7 வார்டு உறுப்பினர்களும், எங்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுலோசனாவின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. அதனால் அவரை பொறுப்புத் தலைவராக நியமிக்க கூடாது. அப்படி அவரை பொறுப்பு தலைவராக நியமித்தால் நாங்கள் 7 பேரும் எங்களது வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வோம் என எதிர்ப்பு தெரிவித்து வட்டார வளர்ச்சி அலுவலர், மரக்காணம் வட்டாட்சியர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இந்நிலையில் நடுக்குப்பம் ஊராட்சிக்கு சுலோசனாவை பொறுப்பு தலைவராக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சுலோசனா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுபோன்று இரு தரப்பினரும் மாறி மாறி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்துள்ள புகார் மீது இதுவரையில் உரிய விசாரணை நடத்தவில்லை என வார்டு உறுப்பினர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட கிராம ஊராட்சிகளின் உதவி இயக்குனர் மஞ்சுளா தலைமையில் நடுக்குப்பம் ஊராட்சி மன்றத்திற்கு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. பொறுப்பு தலைவர் சுலோசனா மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
உதவி இயக்குனர் மஞ்சுளா பொறுப்பு தலைவருக்கு அடுத்தபடியாக அரசு கோப்புகளில் 2வது இடத்தில் கையொப்பம் இடுவதற்குரிய நபரை தேர்வு செய்ய ஆலோசனை நடத்தினார். அப்போது அங்கு இருந்த 7 வார்டு உறுப்பினர்கள் தாங்கள் கொடுத்துள்ள மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தவில்லை. முறையாக விசாரணை நடத்திய பிறகு தான் இரண்டாவது கையொப்பமிட நபரை தேர்வு செய்ய முடியும் என கோரிக்கை வைத்தனர். இதனால் அங்கு இழுபறியான சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வார்டு உறுப்பினர் மற்றும் பொறுப்பு தலைவர் கொடுத்துள்ள மணுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடுத்த கட்ட விசாரணையை நடத்தி தீர்வு எடுப்பார்கள் எனக்கூறி மறு தேதி குறிப்பிடாமல் கூட்டத்தை உதவி இயக்குனர் முடித்துவிட்டு கிளம்பினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.