சங்கராபுரம் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் தாலி செயின் பறிப்பு
சங்கராபுரம், செப். 27: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மேலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மனைவி தமிழரசி. இவரது கணவர் சந்திரன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கதவைத் திறந்து வைத்துவிட்டு வீட்டில் தமிழரசி, அவரது குழந்தைகள் மற்றும் தமிழரசியின் தாய் ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை வீட்டின் பின் பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் வழியாக வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் தூங்கிக் கொண்டிருந்த தமிழரசியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி செயினை அறுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். அதிர்ச்சியடைந்த தமிழரசி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் தமிழரசி வீட்டின் பின்பக்கத்தில் இருந்து விவசாய நிலப்பகுதியில் இருந்து வந்த மர்ம நபர் அடையாளம் தெரியாமல் இருக்க உடம்பில் வண்ணப் பொடிகள் பூசி வந்ததாகவும், மேலும் அரை நிர்வாண கோலத்தில் வீட்டுக்குள் வந்து வீட்டில் தனியாக இருந்த தமிழரசியின் 6 பவுன் தாலி செயினை பறித்து சென்றதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.