விழுப்புரம் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.20,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
விழுப்புரம், செப். 27: விழுப்புரம் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்தவர் அண்ணாமலை (55). விவசாயி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகன் அருள்பிரபா பெயரில் சாலைஅகரம் கண்ணப்பன் நகரில் வீட்டுமனை வாங்கியுள்ளார். இந்த வீட்டுமனைக்கு பட்டா மாறுதல் செய்ய சாலைஅகரம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் (34) என்பவரை அண்ணாமலை அணுகினார். அப்போது வீட்டுமனைக்கு பட்டா மாறுதல் செய்ய ரூ.30 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என அண்ணாமலையிடம் சதீஷ் கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அண்ணாமலை என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றபோது, ரூ.20ஆயிரம் கொடுக்குமாறும், பணம் கொடுத்தால் மட்டுமே பட்டா மாறுதல் செய்ய முடியும் என்று விஏஓ கூறியுள்ளாராம்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அண்ணாமலை, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுரையின்பேரில் அண்ணாமலை நேற்று ரசாயனபவுடர் தடவிய லஞ்சப்பணம் ரூ.20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு விஏஓ சதீஷ்க்கு போன் செய்துள்ளார். அப்போது விஏஓ சதீஷ் கோலியனூர் பெட்ரோல் பங்க் அருகே இருப்பதாகவும். அங்கு வந்து கொடுக்குமாறு கூறியுள்ளார். அதன்படி அங்கு சென்ற அண்ணாமலை லஞ்ச பணத்தை விஏஓ சதீஷிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி தலைமையிலான போலீசார் விஏஓ சதீஷை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து லஞ்ச பணத்தை கைப்பற்றிய போலீசார் அவரை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு சதீஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.