கஞ்சா கிடைக்கும் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 17 வயது சிறுவன் அதிரடி கைது
விருத்தாசலம், நவ. 25: விருத்தாசலம் அருகே கஞ்சா கிடைக்கும் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா கிடைக்கும் என்று பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு குறித்து அறிந்த கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் இதுகுறித்து விசாரணை நடத்த பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் அந்த நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தியதில் பெண்ணாடம் தெற்கு முஸ்லிம் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மறைந்திருந்த சிறுவனை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து கைது செய்தனர். தொடர்ந்து சிறுவனிடம் இருந்த 15 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 200 ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து சிறுவனை கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கஞ்சா கிடைக்கும் என பதிவிட்டு சிறுவன் கைதான சம்பவம் பெண்ணாடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.