அதிமுக செயலாளரை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளருக்கு ஆயுள் சிறை திண்டிவனம் கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு
மயிலம், செப். 25: செஞ்சியில் அதிமுக நகர செயலாளரை அடித்து கொன்ற வழக்கில் டீக்கடை உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டிவனம் கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ரங்கசாமி தெருவை சேர்ந்த ரத்தினசாமி மகன் வெங்கடேசன். செஞ்சி அதிமுக நகர செயலாளராக இருந்தார். செஞ்சி பீரங்கிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்துள்ளார். இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 16.3.2024 அன்று இரவு வெங்கடேசன் திருவண்ணாமலை ரோட்டில் உள்ள வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு வந்த ராஜேந்திரன் திடீரென வெங்கடேசனை வழிமறித்து திட்டி கட்டையால் தலையின் பின்பக்கத்தில் தாக்கினார்.
மேலும் தலையில் கல்லால் தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரன் (44), அவரது மனைவி கல்பனா ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2ல் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமந்த் குமார் ராஜேந்திரன் குற்றவாளி என தீர்மானித்து ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதில் கல்பனா விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து ராஜேந்திரனை போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.