பூனையை துரத்தி சென்றவர் கீழே விழுந்து பலி பண்ருட்டி அருகே சோகம்
பண்ருட்டி, அக். 23: பூனையை துரத்தி சென்ற போது கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் காந்திநகரை சேர்ந்தவர் பஞ்சமூர்த்தி(62). நேற்று இவரது வீட்டின் அருகில் மேய்ந்து கொண்டிருந்த கோழியை பூனை ஒன்று பிடிக்க வந்துள்ளது. இதை பார்த்த பஞ்சமூர்த்தி பூனையை விரட்டி விட்டு, அதனை பிடிக்க துரத்தி சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.