பண்ருட்டி அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க செயின் பறிப்பு
பண்ருட்டி, அக். 23: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மதனகோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி மணிமேகலை(40). இவர், தனது கணவரிடமிருந்து பிரிந்து பண்ருட்டி அடுத்துள்ள கொள்ளுகாரன் குட்டையில் தனது மகன்களுடன் வசித்து வருகிறார். கொள்ளுகாரன் குட்டையில் பூக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பூ வியாபாரம் முடித்து வீட்டிற்கு கொள்ளுகாரன்குட்டை செல்போன் கடை அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு இருட்டில் நின்றிருந்த அடையாளம் தெரியாத நபர், மணிமேகலையின் கழுத்தில் இருந்த மூன்று பவுன் தாலி சரடு, இரண்டு பவுன் செயின் என 5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பினார். மணிமேகலை சத்தம் போட்டதும் அருகில் இருந்தவர்கள் துரத்தினர். மர்ம ஆசாமியை முந்திரி தோப்பில் தேடிப் பார்த்தனர் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின்பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.