தியாகதுருகம் அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
தியாகதுருகம், அக். 23: தியாகதுருகம் அருகே மழையால் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி வனமயில் (65). இவரது கணவர் உயிரிழந்ததால் அண்ணா நகர் பகுதியில் உள்ள கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் அன்றாட வேலையை முடித்துவிட்டு 7 மணி அளவில் கட்டிலில் படுக்கச் சென்றுள்ளார். அப்போது மழையால் வீட்டின் மன்சுவர் திடீரென இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் மண் சுவற்றில் சிக்கி அவர் படுகாயம் அடைந்தார். உடனே இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் சுவற்றை அகற்றி வனமயிலின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிேரதச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.