வில்லியனூரில் பயங்கரம் பட்டறை உரிமையாளர் அடித்து கொலை
புதுச்சேரி, செப். 23: வில்லியனூரில் இரும்பு பட்டறை தொழிலாளி, சுத்தியலால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். கொலையாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புதுச்சேரி வில்லியனூர்- ஒதியம்பேட் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வேதகிரி (60). இவர் வில்லியனூர் அரசு மருத்துவமனை அருகே இரும்பு பட்டறை தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி அமுதா என்ற மனைவியும், மணிகண்டன் என்ற ஒரு மகனும் மற்றும் 2 மகள்களும் உள்ளனர். இவரது இரும்பு பட்டறையிலிருந்து, சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில், வீடு உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேதகிரி, வீட்டுக்கு செல்லாமல், பட்டறை செய்யும் இடத்தில் தங்கி உள்ளார். பின்னர், நேற்று காலை அவரது மனைவி அமுதா, பட்டறை தொழில் செய்யும் இடத்துக்கு சென்று பார்த்தபோது, வேதகிரி தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அமுதா அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். பின்னர், இதுகுறித்து வில்லியனூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உயிரிழந்த வேதகிரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இடத்தில் உள்ள சுத்திகள் கொலையாளிகள் விட்டு சென்ற பொருட்களை சேகரிக்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த வேதகிரிக்கும், அவரது மருமகன் ஆறுமுகத்துக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் வேதகிரியை இவரது மருமகன் ஆறுமுகம் அடித்து கொலை செய்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.