ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்த அதிமுக நிர்வாகி மீது புகார்
காட்டுமன்னார்கோவில், நவ. 22: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள வடக்கு கொளக்குடி ஜாகிர் உசேன் நகரில் தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸ் சேவை கடந்த 1 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆம்புலன்ஸ் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி இரவு ஜாகிர் உசேன் நகரில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆம்புலன்ஸை யாரோ சில மர்ம நபர்கள் முன் பக்க கண்ணாடியை கற்கலால் தாக்கி சேதத்தை ஏற்படுத்தினர். இதனை கண்ட தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் அவர்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசம், உதவி ஆய்வாளர் சையத் அப்சல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ஆம்புலன்ஸை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் ஆம்புலன்ஸின் முன் பக்க கண்ணாடியை சேதப்படுத்தியது அதே பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி என தெரியவந்தது. இதனையடுத்து தொண்டு நிறுவன நிர்வாகி முகம்மது ஜாகிர் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிமுக நிர்வாகியை கைது செய்து சிசிடிவி காட்சி அடிப்படையில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகார் அளித்து உள்ளனர். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் புகார் மனுவை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.