போலி சைக்கிள் நிறுவன மோசடி வழக்கில் முன்ஜாமீன் மனு ரத்து
புதுச்சேரி, நவ. 22: புதுச்சேரி காமராஜர் சாலையில் போலி சைக்கிள் நிறுவனத்தின் மீது மோசடி புகார்கள் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் ஏப்ரல் மாதம் 3ம் தேதி நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது போலி ஆவணங்கள், பான் கார்டு மற்றும் ரூ.2.45 கோடி பணம் இருந்தது. தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிந்து, தலைமை செயல் அதிகாரி நிஷாத் அகமது உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இருப்பினும் போலி சைக்கிள் நிறுவனத்தில் 300க்கும் மேற்பட்ேடார் முதலீடு செய்து, பணத்தை இழந்து வந்தனர். இதற்கிடையே பல கோடி மோசடி என்பதால் நேரடியாக தாமாக முன்வந்து அமலாக்கத்துறை இவ்வழக்கில் விசாரணை நடத்தியதோடு போலி சைக்கிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி நிஷாத் அகமதுவை அதிரடியாக கைது செய்தது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகின.
விசாரணையில், நிஷாத் அகமது தன்னை காப்பாற்றிக்கொள்ள ரூ.80 லட்சத்தை வழக்கறிஞரிடம் கொடுத்து, சைபர் க்ரைம் போலீசார் உள்ளிட்ட சிலருக்கு கொடுத்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தியை காவல்துறை தலைமையகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. மேலும் அமலாக்கத்துறை விசாரணையில், இன்ஸ்பெக்டர் மட்டுமல்லாது, மேலும் சில காவல்துறை உயரதிகாரிகளுக்கும் பணம் கொடுத்ததாக நிஷாத் அகமது கூறியிருப்பதாக தெரிகிறது.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணையில் போலி சைக்கிள் நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் 2 பேரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டார். இதற்கிடையே, போலி சைக்கிள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் 2 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை, கடந்த 17ம் தேதி விசாரணைக்கு வந்தது. இதனை, விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், முக்கிய பொறுப்பாளர்கள் 2 பேர் உட்பட 18 பேரை புதுச்சேரி சிபிசிஐடி போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.