அரசு பள்ளியில் பொம்மை வைத்து மாந்திரீக வழிபாடு
உளுந்தூர்பேட்டை, செப். 22: அரசு பள்ளியில் பொம்மை வைத்து மர்ம நபர்கள் மாந்திரீக வழிபாடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நன்னாவரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நன்னாவரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அந்த கிராமத்தை சேர்ந்த உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு சிறப்பு வகுப்புக்கு சென்றுள்ளனர். அப்போது பள்ளி வளாகத்தில் ஒரு பொம்மை வைத்து அதை சுற்றி மஞ்சள், குங்குமம் கொட்டப்பட்டு மாந்திரீகம் செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் வெளியேறி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து சென்ற பெற்றோர்கள் பள்ளியில் மர்ம நபர்கள் மாந்திரீக வேலைகள் செய்திருந்ததை பார்த்து அச்சமடைந்தனர்.
மகாளய அமாவாசை தினம் என்பதால் நேற்றுமுன்தினம் இரவு மர்ம நபர்கள் பள்ளி வளாகத்தில் இதுபோன்று மாந்திரீக வழிபாடு செய்துள்ளதாக தெரிகிறது. எம்.குன்னத்தூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஏற்கனவே மாந்திரீக வழிபாடு மர்ம நபர்கள் செய்திருந்தனர். தற்போது நன்னாவரம் அரசு பள்ளியிலும் பொம்மை வைத்து மாந்திரீக வழிபாடுகள் நடைபெற்றுள்ள சம்பவம் குறித்து திருநாவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.