கச்சிராயபாளையம் அருகே பரபரப்பு: மகனை மண்வெட்டியால் வெட்டிய தந்தை கைது
சின்னசேலம், செப். 22: மகனை மண்வெட்டியால் வெட்டிய தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கச்சிராயபாளையம் அருகே கரடிசித்தூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன் மகன் ராமச்சந்திரன்(32). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சென்னை தரமணியில் கார்பென்டர் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு சந்தியா என்ற பெண்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் சந்தியா தனது குழந்தையுடன் உறவினர்களை பார்க்க சென்னை சென்றுவிட்டார். இதனால் ராமச்சந்திரன் மட்டும் வீட்டில் தனியாக தங்கி இருந்தார். அப்போது காதலித்து திருமணம் செய்த ஆத்திரத்தில் அவரது தந்தை கொளஞ்சியப்பன் மகனை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி உள்ளார். இதனால் ராமச்சந்திரன் தங்கியிருந்த வீட்டை பூட்டிவிட்டு, தாயுடன் கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று அங்கு தங்கியுள்ளார். இதையடுத்து மகன் பூட்டிய வீட்டின் பூட்டை கொளஞ்சியப்பன் உடைத்தது தங்கியுள்ளார்.
இதை பற்றி அறிந்த ராமச்சந்திரன் அங்கு சென்று நான் பூட்டிய பூட்டை உடைத்து குறித்து தந்தையிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் பழையபடி நீங்கள் வீட்டில் தங்கிக்கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி இரவு 9.30 மணியளவில் வீட்டு முகப்பில் ராமச்சந்திரன் படுத்து இருந்தபோது, கொளஞ்சியப்பன்(60) அவரை மண்வெட்டியால் முகம், தலையில் பலமாக வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த ராமச்சந்திரனை அவரது தாயார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராமச்சந்திரன் அளித்த வாக்குமூலத்தின்பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொளஞ்சியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.