காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பு நீதிமன்ற வளாகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி
காட்டுமன்னார்கோவில், நவ. 21: கடலூர் மாவட்டம் முஷ்ணம் பகுதியை சேர்ந்தவர் மாய கிருஷ்ணன் மகன் கண்ணன் (53). இவர் தனியார் நிதி நிறுவனத்தின் மீது நஷ்ட ஈடு கேட்டு சிவில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு காட்டுமன்னார்கோவில் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அந்த வழக்கில் தனக்கு வரவேண்டிய ரூ.9000 பணத்தை விரைவில் வாங்கி தரவும், விரைந்து முடிக்க வேண்டும் என தனது தரப்பு வழக்கறிஞர் மூலம் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்ற வளாகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி கொண்டு பணத்தை விரைவில் வாங்கி தர வில்லை என்றால் கொளுத்தி கொள்வேன் என மிரட்டி உள்ளார். இதனை கண்ட நீதிமன்றத்தில் இருந்த காவலர்கள், பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அவரை மீட்டு காட்டுமன்னார்கோவில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் இதையடுத்து அங்கு வந்த காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசம், உதவி ஆய்வாளர் சையத் அப்சல் மற்றும் போலீசார் அவரை விசாரணைக்கு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.