சாலையோரம் நின்ற டிப்பர் லாரி மீது பைக் மோதி விபத்து வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் பலி
விக்கிரவாண்டி, ஆக.20: விக்கிரவாண்டி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் வடமாநில தொழிலாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஜார்கண்ட் மாநிலம் வில்முருக்கியை சேர்ந்தவர் அமனோரியான்(26), வில்நவுதியாவை சேர்ந்தவர் ராம்ராஜ்ராம் (26). இருவரும் விக்கிரவாண்டி அடுத்த மேல்பாதியில் சக்திவேல் என்பவரிடம் கேபிள் புதைக்கும் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் பைக்கில் திருக்கனுார் சென்றுவிட்டு மீண்டும் மேல்பாதிக்கு திரும்பியபோது தொரவி அருகே சாலையோரம் நிறுத்தியிருந்த எம்.சாண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரியின் பின்னால் பைக் நிலைதடுமாறி மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.