விக்கிரவாண்டி அருகே சோகம் பைக் மீது லாரி மோதி விஏஓ, மகள் பரிதாப பலி
விக்கிரவாண்டி, நவ. 19: விக்கிரவாண்டி அருகே பைக் மீது லாரி மோதி விஏஓ, அவரது மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம், துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(42). தாண்டவ சமுத்திரகுப்பம் கிராமத்தில் விஏஓவாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று காலை புதுச்சேரி, தனியார் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படிக்கும் தனது மகள் சூர்யபிரியா(17) வை பைக்கில் அழைத்துக்கொண்டு விழுப்புரம் நோக்கி சென்றார்.அப்போது பைக் கஞ்சனூர் அடுத்த பூண்டி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிர் திசையில் முண்டியம்பாக்கத்திலிருந்து உர மூட்டைகளை ஏற்றிக்கொண்டு செஞ்சி நோக்கி சென்ற லாரி பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி பலியானார்கள். தகவல் அறிந்த கஞ்சனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் விஏஓ, அவரது மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.