மயிலம் அருகே வீட்டின் கதவை உடைத்து கத்தி முனையில் முதியவர்களை மிரட்டி 10 பவுன் கொள்ளை
மயிலம், அக்.18: விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்துள்ள கீழ் எடையாளம் கிராமத்தில் சேர்ந்தவர் கிருஷ்ணன் (82) என்பவரும், இவரது மனைவி கிருஷ்ணவேணியும்(75) வசித்து வருகின்றனர். இவர்கள் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு வீட்டை உள்பக்கம் தாழிட்டு விட்டு தூங்கச் சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்கள் 3 பேர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர்கள் கிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணவேணி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, தடியால் தாக்கி வீட்டின் பீரோவில் இருந்த 10 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் தங்க நகை மற்றும் பத்தாயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு வீட்டின் பின் பக்கம் வழியாக தப்பி ஓடியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் காவல் நிலைய போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் உதவியோடு குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். நள்ளிரவில் முதியவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து கத்தி முனையில் மிரட்டி பணம் மற்றும் 10 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலம் பகுதியில் இரவு நேரங்களில் தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதால் போலீசார் இரவு நேரங்களில் முறையான ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.