கரியாலூர் காவல் நிலைய 2 காவலர்கள் அதிரடி சஸ்பெண்ட் எஸ்பி மாதவன் உத்தரவு
கள்ளக்குறிச்சி, செப். 17: கரியாலூர் காவல்நிலையத்தில் 2 காவலர்கள் சர்ச்சையில் சிக்கியதால் சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி அருகே கரியாலூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றிய பிரபு அப்பகுதியில் உள்ள பெட்டிகடை உரிமையாளர் மகள் 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விவகாரத்தில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் பிரபு மீது போக்சோ, வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பிரபுவை கள்ளக்குறிச்சி எஸ்பி மாதவன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மேலும் அதே காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் யுவராஜ் என்பவர் காவலர் குடியிருப்பு வளாகத்தில் மக்கள் நடந்து செல்லும் பகுதியில் அரை நிர்வாணத்துடன் நின்றுகொண்டு ஆபாசமாக பேசிய வீடியோ நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் காவலர் யுவராஜை எஸ்பி சஸ்பெண்ட் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். ஒரே காவல் நிலையத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய விவகாரத்தில் ஒரே நாளில் இரண்டு காவலர்களையும் எஸ்பி சஸ்பெண்ட் செய்த விவகாரம் காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.