பைக் மீது லாரி மோதி தனியார் கம்பெனி மேலாளர் ஹெல்மெட்டுடன் தலைநசுங்கி சாவு
புதுச்சேரி, அக். 16: புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவட்டம், வளவனூர் திருக்குறிப்புதொண்டர் நகரை சேர்ந்தவர் ராஜா (32). இவர், புதுச்சேரி குருமாம்பேட்டில் உள்ள தனியார் கம்பெனியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். திருமணமாகி பவானி என்ற மனைவி உள்ளார். 10 மாத ஆண் குழந்தை உள்ளது. ராஜாவும், கம்பெனியில் உடன் பணிபுரியும் சீனியர் இன்ஜினியர் புஷ்பராஜ் (29) என்பவரும், ஒரே பைக்கில் வேலைக்கு செல்வது வழக்கம். அதுபோல் நேற்று முன்தினம் காலை இருவரும் பைக்கில் வளவனூரில் இருந்து வேலைக்கு புறப்பட்டனர். ராஜா ஹெல்மெட் போட்டு பைக்கை ஓட்டி வந்தார். பின்னால் புஷ்பராஜ் அமர்ந்து இருந்தார். புதுச்சேரி டி.வி. மலை மெயின் ரோடு செல்லிப்பட்டு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக வந்த லாரி மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜா மீது லாரியின் வலது பின்பக்க டயர் ஏறியது. இதில் ஹெல்மெட் உடைந்து தலை நசுங்கி ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புஷ்பராஜ் வலது காலில் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து புஷ்பராஜ் அளித்த புகாரின்பேரில் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.