பெண்ணை கொல்ல முயன்ற வழக்கில் மேலும் ஒரு ரவுடி கைது
நெய்வேலி, செப். 15: நெய்வேலி இந்திராநகர் மாற்று குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகனுக்கும், மற்றொரு தரப்புக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கணேசன் வீட்டிற்கு வந்த ரவுடி மோனிஷ் உள்ளிட்ட 8 பேர் உனது மகன் எங்கே என கேட்டு தகராறில் ஈடுபட்டு, வீட்டில் இருந்த பைக் மற்றும் கதவை உடைத்துள்ளனர். மேலும் கணேசன் மனைவி கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்ய முயன்றுள்ளனர்.
இது குறித்து கடந்த 6ம் தேதி கொடுத்த புகாரின் பேரில், நெய்வேலி நகர போலீசார், மோனிஷ் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து கடந்த 5 நாட்களுக்கு முன் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் இதில் தொடர்புடைய லட்டு என்கிற அருண்(22), பாட்டு என்கிற பாடலீஸ்வரன்(24), பெரிய லட்டு என்கிற அரவிந்த்(24), நிர்மல் ராஜ்(23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான வடக்கு மேலூரை சேர்ந்த திருஞான முருகவேல் மகன் பட்டு என்கிற ராஜதுரை(22) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் வட்டம் 5 என்எல்சி தைலம் தோப்பு அருகே ராஜதுரை பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில், போலீசார் அங்கு சென்று ராஜதுரையை கைது செய்ய முயன்றனர்.
அப்போது போலீசாரிடம் இருந்து தப்பியோட முற்படும்போது கீழே விழுந்ததில் ராஜதுரைக்கு வலது கால் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராஜதுரை மீது 3 கொலை முயற்சி வழக்கு, ஒரு ஆயுதம் வழக்கு, 2 அடிதடி வழக்குகளும் என மொத்தம் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது.