பேக்கிங் பொருட்கள் ஆர்டர் செய்த வில்லியனூர் தொழிலதிபரிடம் ரூ.3.42 லட்சம் மோசடி
புதுச்சேரி, செப். 15: பேக்கிங் பொருட்கள் ஆர்டர் செய்த வில்லியனூர் தொழிலதிபரிடம் ரூ.3.42 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி, வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சொந்தமாக பேக்கிங் தொழில் செய்து வருகிறார். இதற்காக பேக்கிங் பொருட்களை வாங்க ஆன்லைன் மூலம் தேடியுள்ளார். அப்போது ஒரு செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது மர்ம நபர் ஒருவர் பேக்கிங் பொருட்களை விநியோகம் செய்வதாக கூறியுள்ளார்.
இதனை நம்பி அவர் பேக்கிங் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அதற்காக ரூ.3 லட்சத்து 42 ஆயிரம் பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். ஆனால் குறைந்த அளவிலான பொருட்கள் மட்டும் டெலிவரி செய்யப்பட்டதால் அந்த மர்ம நபரை தொடர்பு கொண்டபோது இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் பணத்தை இழந்த அவர் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
மேலும், உறுவையாறு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு இணையவழி மூலம் போன் செய்து ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை உள்ளது. ஆன்லைன் மூலம் டிரேடிங் செய்தால் அதிகளவில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியதால் அந்த நபர் ரூ.91 ஆயிரம் பணத்தை முதலீடு செய்துள்ளார். பிறகு இணையவழி குற்றவாளிகள் அவரது இணைப்பை துண்டித்துவிட்டனர். இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இதேபோல் கதிர்காமம் பகுதியை சேர்ந்த ஒரு பெண் ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து எண்டோஸ்கோப்பி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இதற்காக ரூ.91 ஆயிரம் பணத்தை ஆன்லைனில் செலுத்தினார். ஆனால் எண்டோஸ்கோப்பி வரவில்லை. இதனால் அப்பெண் பணத்தை இழந்ததை உணர்ந்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகார்களை பெற்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.