எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தொழிலாளி மனு
கடலூர், செப். 14: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தட்டான்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (43), கூலித்தொழிலாளி. இவருக்கும், இவரது வீட்டின் அருகே வசித்து வருபவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருவதாக தெரிகிறது. இதனால் ஐயப்பன் கடந்த 2 மாதங்களாக வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதற்கிடையே ஐயப்பன் வசித்த வந்த வீட்டை எதிர் தரப்பினர் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து நொறுக்கியதுடன், அவரது வீட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம், நகை மற்றும் வெள்ளி பொருட்களையும் திருடி சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று ஐயப்பன் தனது குடும்பத்தினருடன் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார். அதில் எதிரிகளால், தனது உயிருக்கும், தனது குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது. மீண்டும் எங்கள் ஊருக்கு சென்று குடும்பம் நடத்த வழிவகை செய்ய வேண்டும். எங்கள் உடமைகளை மீட்டு தரவும், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும், இவ்வாறு கூறியுள்ளார். இதற்கு போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.