சேத்தியாத்தோப்பு அருகே 200 கிலோ முதலை பிடிபட்டது
சேத்தியாத்தோப்பு, டிச. 13: சேத்தியாத்தோப்பு அருகே தட்டானோடை கிராமம் பகுதியில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு மழை வெள்ளத்தின்போது அதிகளவில் வெள்ளநீர் வயல்வெளிப்பகுதிகள், வடிகால் ஓடைகளில் தேங்கியது. இதில் மழைவெள்ள நீரில் மூன்றுக்கும் மேற்பட்ட முதலைகள் அடித்து வரப்பட்டதாக வயல் பகுதிகளுக்குள் சென்று பார்த்த விவசாயிகள் பலரிடமும் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் அச்சமடைந்தனர். பின்னர் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இந்நிலையில் நேற்று விருத்தாசலம் வனத்துறையினர் முதலை ஒன்று தனியார் மீன்வளர்ப்பு குளத்தில் இருப்பதை அறிந்து வலைவீசி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணிநேர தேடுதலுக்கு பிறகு முதலை பிடிபட்டது. முதலையானது ஆறடி நீளமும், 200 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இதனை வனத்துறையினர் எடுத்துச்சென்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளும், கிராமமக்களும் கூறும்போது, இப்பகுதிக்குள் 3 முதலைகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஒரு முதலை பிடிபட்டுள்ளது. மற்ற முதலைகள் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. அரசும், அதிகாரிகளும் முதலைகளை பாதுகாப்பான வசிப்பிடங்களில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பான நிரந்தர இருப்பிடங்களை உருவாக்க வேண்டும். என கூறினர்.