மாமங்கலம் ஊராட்சியில் தேனீக்கள் கடித்து 10 பேர் காயம்
முஷ்ணம், நவ. 13: முஷ்ணம் அருகே மாமங்கலம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் தேசிய ஊரக வேலை திட்ட பணி நடந்து வருகிறது. நேற்று இங்குள்ள பெரிய ஆண்டவர் கோயில் அருகே உள்ள குளத்தில் இருந்து பணியாளர்கள் தண்ணீரை எடுத்து மரக்கன்றுகளுக்கு ஊற்றிவிட்டு மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அப்பகுதிக்கு வந்த மலைத்தேனீக்கள் கடித்ததில் வெண்ணிலா, சரிதா, ராணி, பட்டு, சுதா, கமலா, லதா, ஜோதி, கல்யாணி உள்பட 10 பேர் காயமடைந்தனர். இவர்கள் சோழத்தரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் .இதில் வெண்ணிலா மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா அண்ணாமலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இது குறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரநாராயணன், ஊராட்சி செயலர் நாகராஜன், சோழத்தரம் காவல் உதவி ஆய்வாளர் பிரசாந்த் ஆகியோர் சென்று விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.