அதிவேகமாக பைக் ஓட்டிய 7 பேர் கைது
விழுப்புரம், அக். 13: அதிவேகமாக பைக்கை ஓட்டிச் சென்ற 7 பேரை போலீசார் கைது செய்து, பைக்குகளை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் நகரில் அதிவேகமாக பைக் ஒட்டி செல்வதால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் பைக் சாகசங்களும் நடைபெறுவதாக புகார்கள் வந்தன. இது குறித்து விழுப்புரம் நகரில் உள்ள முக்கிய இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தி, அதிவேகமாக பைக் ஓட்டி செல்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று 8 பேரை அதிவேகமாக பைக் ஓட்டி சென்றதாக கைது செய்துள்ளனர். விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அதிவேகமாக பைக் ஓட்டிச் சென்ற திருவாமாத்தூர் வெங்கடேசன்(41), 18 வயது சிறுவன், வழுதரெட்டி திலீபன்(26) ஆகிய 3 பேர், அதிவேகமாக பைக் ஒட்டியதாக தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் விழுப்புரம் முத்தோப்பு பகுதியை சேர்ந்த சிராஜ்(19) என்பவரை நகர காவல் நிலைய போலீசார் அதிவேகமாக பைக் ஒட்டியதாக கைது செய்தனர். இதேபோல், விழுப்புரம் பூந்தோட்டம் சந்துரு(25), திருவள்ளுவர் நகர் வெங்கடபிரசாத்(27) ஆகியோரை விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் அதிவேகமாக பைக் ஓட்டியதாக கைது செய்து பைக்குகளை பறிமுதல் செய்தனர். கோட்டக்குப்பத்தில் அதிவேகமாக பைக் ஒட்டிய பிரவீன்(25) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து பைக் பறிமுதல் செய்தனர்.