கல்லூரியில் மாணவர்கள் மோதல்
விருத்தாசலம், ஆக. 12: விருத்தாசலத்தில் திரு அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி அமைந்துள்ளது. இங்கு விருத்தாசலம் மட்டும் இன்றி கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் வந்து கல்வி பயின்று வருகின்றனர். இந்த கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது இரு பிரிவாக பிரிந்து மோதிக் கொள்கின்றனர். இதுபோல் கடந்த வாரமும் மோதிக்கொண்டனர். மேலும் கடந்த வியாழக்கிழமை அன்று கல்லூரி நுழைவு வாயில் முன்பு மோதிக்கொண்டனர். இந்நிலையில் நேற்று காலை கல்லூரி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென இரண்டு தரப்பு மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் முனியன் விரைந்து வந்து அந்த மாணவர்களை கண்டித்து துரத்தி அனுப்பினார். ஆனால் அதனையும் மீறி மீண்டும் அந்த மாணவர்கள் தங்களது பைக்குகளில் அதிக சத்தம் எழுப்பியதுடன், கல்லூரி வளாகத்திற்குள் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தனர். விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தாலும் காவலர்கள் வரும்போது அவர்கள் தப்பித்து ஓடி தலைமறைவாகி விடுகின்றனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகமும், காவல்துறை நிர்வாகமும் சேர்ந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.