திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுத்தை நடமாட்டமா? பொதுமக்கள் அச்சம்
திருவெண்ணெய்நல்லூர், டிச. 11: திருவெண்ணெய்நல்லூர் அருகே இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், நேற்று அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு மலட்டாறு வனப்பகுதி வழியாக சென்றுள்ளார். அப்போது வனப்பகுதிக்குள் மர்மமான விலங்கு ஒன்று சென்றதாக அவர் கூறியதின் பேரில், இருவேல்பட்டு கிராம மக்களிடையே சிறுத்தை நடமாடுவதாக வதந்தி பரவியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் வனவர் பிரபாகரன் சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள வனப்பகுதிகளில் சிறுத்தை நடமாடுவதாக கூறிய பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதியில் காணப்பட்ட விலங்குகளின் காலடித்தடங்களை பதிவு செய்து எந்த விலங்கினுடையது குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வில் அந்த காலடித்தடத்தில் நகம் பதிவாகி இருப்பதால் அது நாயின் காலடித்தடம் என்றும், சிறுத்தையின் காலடித்தடத்தில் நகம் பதியாது என்று கூறினர். எனவே இங்கு சிறுத்தைகள் நடமாடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறி பொதுமக்களிடத்தில் நிலவிய அச்சத்தை போக்கினர்.