கனியாமூர் பள்ளி கலவர வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் 33 சிறுவர்கள் ஆஜர் அக்டோபர் 8ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
விழுப்புரம், ஆக. 9: தனியார் பள்ளி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 33 சிறுவர்கள் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இவர்கள் மீதான வழக்கு விசாரணையை அக்டோபர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவி மதி 2022ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து, பள்ளி வளாகத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறி, அங்கிருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.
இது தொடர்பாக 53 சிறுவர்கள் உள்பட 916 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இதில் 53 சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால், அவர்கள் மீதான விசாரணை விழுப்புரத்தில் உள்ள இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக 1,100 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று நீதிபதி சந்திரகாசபூபதி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 33 சிறுவர்கள் நேரில் ஆஜராகினர். 20 பேர் ஆஜராகவில்லை. அவர்களது தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, வராதது குறித்து மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.