கவுன்சிலர் கடையில் மின் திருட்டு? தடுப்பு படை குழு திடீர் ஆய்வு நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு
நெல்லிக்குப்பம், ஆக. 8: நெல்லிக்குப்பம் நகராட்சி 8வது வார்டு கவுன்சிலர் சத்தியா புருஷோத்தமன். இவர் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் இடையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் மின் இணைப்பை துண்டித்து விட்டு நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து பயன்படுத்தி வருவதாக மின்வாரிய உயர் அலுவலகத்துக்கு புகார் வந்ததாக கூறி, மின் திருட்டு தடுப்பு படை குழுவினர் கவுன்சிலர் சத்தியா புருஷோத்தமன் கடையில் நேற்று திடீரென ஆய்வு செய்தனர். ஆய்வின்போது பழக்கடை மின்சார சர்வீஸ் நம்பருக்கு மின்சார வாரியத்தின் மூலம் பெறப்பட்ட மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தி வந்தது மின் அளவீடு பெட்டியின் மூலம் தெரிய வந்தது. தன் மீது காழ்ப்புணர்ச்சியால் யாரோ மின் வாரியத்துக்கு விலாசம் இல்லாத கடிதம் அனுப்பியுள்ளதாக கவுன்சிலர் தெரிவித்தார். இச்சம்பவம் நெல்லிக்குப்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.