ரூ.2 ஆயிரம் கோடிக்கு போலி மருந்து விநியோகம் சிபிஐ விசாரணைக்கு கவர்னர் பரிந்துரைக்க வேண்டும் காங்., நிர்வாகிகள் மனு
புதுச்சேரி, டிச. 7: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் அனந்தராமன், கார்த்திகேயன், சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ் உள்ளிட்ட காங், நிர்வாகிகள் ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் பிரபல மருந்து நிறுவனத்தின் பெயரில் போலி மருந்து தயாரிக்கப்படுவதாக சிபிசிஐடி போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ரூ.40 கோடி போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டது. இதில் மதுரையை பூர்வீகமாக கொண்ட ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவர் மூலப்பொருட்களை கொண்டு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மூக்கு மருந்து உள்ளிட்ட பல்வேறு மருந்துகளை போலியாக தயாரித்துள்ளார்.
இந்த போலி மருந்துகள் உத்தரப்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டபோது, இது புதுச்சேரியில் இருந்து தயாரித்து நாடு முழுவதும் விநியோகிக்கப்படுவது தெரியவந்துள்ளது. புதுச்சேரியில் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு போலி மருந்து உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மாநிலத்துக்கான ஜிஎஸ்டி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போலி மருந்து கம்பெனியினுடைய உற்பத்தியாளர் ராஜா அரசியல் பின்புலத்தோடு செயல்பட்டு வருகிறார். அவரை அரசியல்வாதிகள் காப்பாற்றி வருகின்றனர். சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு அதிகாரிகளை ஆய்வுக்குச் செல்லக்கூடாது என்று அரசியல்வாதிகள் மிரட்டியுள்ளனர்.
இந்த போலி மருந்து கம்பெனிகள், கடந்த நான்கரை ஆண்டுகளாக ஜிஎஸ்டி பதிவு, தொழில் அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி என எந்தவித அனுமதியும் பெறாமல் இயங்கி உள்ளது. சுகாதாரத்துறைக்கு ரங்கசாமிதான் பொறுப்பு வகிக்கிறார். முதல்வரின் பங்கு குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். சிபிசிஐடி விசாரணை மற்ற மாநிலங்களை உள்ளடக்கவில்லை. மேலும் போலி மருந்துகள் பல்வேறு மாநிலங்களுக்கு விற்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடியிலிருந்து, சிபிஐக்கு மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். புதுச்சேரியில் சந்தைகளில் விற்கப்படும் மருந்துகளின் தரத்தை சோதிக்க சிறப்புக்குழு அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.