நர்சிங் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் காலாப்பட்டில் மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
காலாப்பட்டு, நவ. 7: புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த வருடம் அதே மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவில் பணிபுரியும் இருவர் அங்கு நர்சிங் பயின்று வரும் 9 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாணவிகள் கடந்த ஜனவரி மாதம் கல்லூரியில் அமைக்கப்பட்ட உள் புகார் கமிட்டியில் முறையிட்டனர். மாணவிகளின் புகாரை விசாரித்த உள்கமிட்டி மாணவிகளின் புகாரில் உண்மை இருப்பதாக கூறி எக்ஸ்ரே பிரிவு பணியாளர்கள் இருவரை தற்காலிக பணிநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டது.
இதனிடையே இருவரில் ஒருவர் சிலதினங்களுக்கு முன்பு பணிக்கு வந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீண்டும் இருவரையும் நிரந்தர பணிநீக்கம் செய்யக்கோரியும் நர்சிங் மாணவிகள் நேற்று திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக புதுச்சேரி அம்பேத்கர் சட்டக்கல்லூரி மற்றும் இந்திய மாணவர் சங்கம் மாணவர் அமைப்பினர் கல்லூரி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த காலாப்பட்டு போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்லூரி நிர்வாகத்திடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர். மாணவர்களின் திடீர் போராட்டத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.