கடலில் கவிழ்ந்த படகு கடலூரில் பரபரப்பு
கடலூர், டிச. 6: டிட்வா புயல் காரணமாக மீனவர்கள் கடந்த நவம்பர் மாதம் முதல் பத்து நாட்களாக கடலுக்குச் செல்லாமல் இருந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் கடலுக்குச் மீன்பிடிக்க செல்ல துவங்கினர்.
டிட்வா புயல் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக கரை கடந்த நிலையிலும் கடலூர் கடல் பகுதி சீற்றத்துடனே காணப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடலூர் தாழங்குடா பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ராகவேந்திரன், திவாகர், நடராஜன் ஆகியோர் பைபர் படகு மூலம் நேற்று காலை தாழங்குடாவில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். பிற்பகல் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது சூறாவளி காற்றுடன் கடல் சீற்றமாக காணப்பட்ட நிலையில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதில் படகில் இருந்த மூன்று மீனவர்களும் கடலில் சிக்கினர்.
பின்னர் மூன்று பேரும் நீந்தியப்படியே கரை சேர்ந்தனர். விபத்து குறித்து மற்ற மீனவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு மற்றொரு படகு மூலம் கடலில் கவிழ்ந்த படகை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கவிழ்ந்த படகில் இருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலை கடலில் அடித்துச் செல்லப்பட்டது. பின்னர் சேதமடைந்த படகை கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்தனர். கரையில் இருந்து படகை 30க்கும் மேற்பட்ட மீனவர்கள் கயிறு மூலம் இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர். கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு மூன்று மீனவர்கள் நீச்சல் அடித்தபடி கரை திரும்பிய சம்பவம் கடலூர் மீனவ கிராம பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.