கிணற்றில் தவறி விழுந்து பொறியியல் பட்டதாரி பலி
சின்னசேலம், நவ. 6: சின்னசேலம் அருகே வாசுதேவனூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருணாகரன்(56). விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது மனைவி ஜெயந்தி(46). இவர்களுக்கு வசந்த்(26), நர்மதா(23) ஆகிய இரு பிள்ளைகள் இருந்தனர். வசந்த் பொறியியல் படித்து பட்டம் பெற்றுள்ளார். மேலும் தற்போது விவசாய வேலையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் வசந்த் கடந்த 4ந்தேதி இரவு மக்காச்சோள பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச தனியாக சென்றார். அவர் வயலுக்கு சென்று வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவரது தந்தை கருணாகரன் வயலுக்கு சென்று பார்த்தார். அவரை அங்கு காணவில்லை. இதையடுத்து கிணற்றின் அருகில் சென்று பார்த்தபோது வசந்த்தின் காலணிகள் இருப்பதை கண்டு பதற்றம் அடைந்தார்.
இதையடுத்து கிணற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் சின்னசேலம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மீட்பு உபகரணங்களுடன் வந்து கிணற்றில் இறங்கி தேடினார்கள். சுமார் 2 மணிநேர தேடுதலுக்கு பிறகு வசந்த் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து இறந்துபோன வசந்தின் தந்தை சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.