குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் சஸ்பெண்ட்
கடலூர், நவ. 6: குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடலூர் அருகே அன்னவள்ளி கிராமத்தில் சாலையில் நின்றிருந்த தொழிலாளர்கள் மீது கார் மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியாகினர். அதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்குபதிந்து கார் ஓட்டிய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மீது வழக்குபதிவு செய்தனர். விசாரணையில் காரை ஓட்டி வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் குடிபோதையில் இருந்ததும் அவருடன் வந்த மற்றொரு காவலர் இமாம் உசேன் குடிபோதையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. காவல்துறையைச் சேர்ந்த 2 பேர் குடிபோதையில் சென்ற நிலையில் விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் காரை ஓட்டிய சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டம் ஆவினன்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், காவலர் இமாம் உசேன் ஆகியோர்கள் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று சாலையில் நின்றிருந்த 4 நபர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தி, 2 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குடிபோதையில் அஜாக்கிரதையாக கார் ஓட்டிச்சென்று விபத்து மரணத்தை ஏற்படுத்திய ஆவினங்குடி காவல் நிலைய சிறப்பு உதவிஆய்வாளர் ராஜேந்திரன், காவலர் இமாம் உசேன் ஆகியோர்கள் பணியிடை நீக்கம் செய்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஜெயக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.