நெய்வேலி விமான நிலைய பணிக்கு ரூ.26 கோடி செலவீடு கடலூர் எம்பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சகம் பதில்
கடலூர், ஆக. 6: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிலக்கரித்துறை அமைச்சகத்திடம் கடலூர் டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்பி கேள்வி எழுப்பி பேசுகையில், என்எல்சி இந்தியா லிமிடெட் மற்றும் அதன் கூட்டுத்தொழில் முனைவோரால் 2024-2025ம் நிதியாண்டில் மொத்தமாக 23,131.6 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 13 மாநிலங்களுக்கு மின் உற்பத்தியை பகிர்வதாகவும், அந்த மின் பகிர்வினை மத்திய மின்சார ஆணையம் கட்டுப்படுத்துவதாகவும் கூறுகிறது. என்.எஸ்.சி.வழங்கிய தகவலின்படி, தமிழ்நாட்டில் உள்ள அதன் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களில் என்.எல்.சி. இந்தியா லிமிடெட் இதுவரை மொத்தமாக ரூ.6,349.85 கோடி முதலீட்டு செலவாக செலவிட்டுள்ளது.
இதில் ரூ.1,857.59 கோடி பங்குதாரர் முதலீடாக உள்ளது. 2024-2025ம் நிதியாண்டுக்கான இத்திட்டங்களிலிருந்து கிடைத்த மொத்த லாபம் ரூ.234.78 கோடியாகும், என்று கூறினார். தொடர்ந்து பொது விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் எம்பி எழுப்பிய கேள்விக்கு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் பதில் கூறுகையில், நாட்டில் மொத்தம் 162 விமான நிலையங்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும், அதில் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, தூத்துக்குடி ஆகிய 6 இடங்களில் செயல்படுகின்றன. நாட்டில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 17 விமான நிலையங்கள் உள்ளது. கிரீன் பீல்ட் விமான நிலையங்கள் அமைக்க முதற்கட்டமாக மத்திய அரசு 24 விமான நிலையங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் பரந்தூர் விமான நிலையமும் அடங்கும்.
அனுமதி வழங்கப்பட்ட 24 விமான நிலையங்களில் 12 விமான நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. உதான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சேலம், வேலூர், நெய்வேலி மற்றும் தஞ்சாவூர் ஆகிய 4 விமான நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் சேலம் விமான நிலையம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. நெய்வேலி விமான நிலையம் மேம்படுத்த உதான் திட்டத்தின் கீழ் ரூ.26.43 கோடி செலவிடப்பட்டுள்ளது, என்றார். இதற்கு நெய்வேலி விமான நிலைய பணிக்கு ரூ.26 கோடி செலவீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் பயன்பாட்டிற்கு முழுமையாக செயல்படுவது எப்போது என கோரிக்கை வலுக்கிறது.