வீட்டு முன் நிறுத்தியிருந்த ஆட்டோ தீ வைத்து எரிப்பு
புதுச்சேரி, நவ. 5: புதுச்சேரி ராஜாநகரை சேர்ந்தவர் சசி (எ) சிவக்குமார் (47). இவர், புதிய பேருந்து நிலையம் முன்பு உள்ள ஸ்டான்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து ஆட்டோவை வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார். பின்னர் சாப்பிட்டு தூங்கி விட்டார். அதிகாலை 2 மணியளவில் வீட்டு வாசலில் சத்தம் கேட்டுள்ளது. உடனே அவர் தூக்கத்தில் இருந்து எழுந்து சென்று பார்த்தபோது அவரது ஆட்டோ தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தார். இது குறித்து அவர், உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் அதே தெருவில் வசிக்கும் விஜய் பெட்ரோல் ஊற்றி ஆட்டோவை எரித்துவிட்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. கடந்த 5 நாட்களுக்கு முன், சிவக்குமாரின் நண்பர் பாஸ்கரிடம் விஜய் பிரச்னை செய்துள்ளார். இதனை சிவக்குமார் தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஆட்டோவை எரித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து விஜயை போலீசார் தேடி வருகின்றனர்.