ஓடையில் மார்பளவு தண்ணீரில் இறங்கி சடலத்தை எடுத்து சென்ற உறவினர்கள் பாலம் அமைத்து தர வலியுறுத்தல்
திட்டக்குடி, டிச. 4: கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள நாவலூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நாவலூர் கிராமத்தில் காத்திலிங்கம் என்பவர் உடல்நலக்குறைவால் நேற்று இறந்தார். அவரது உடலை இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் ஓடைப்பாதை முற்றிலும் சேதமடைந்து செல்வதற்கு வழியற்ற நிலையில் இருந்தது. மயானத்திற்கு செல்ல வேண்டுமெனில் ஓடையை கடந்துதான் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த சில தினங்களாக திட்டக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்ததால் ஓடையில் தண்ணீர் ஓடியது. இதையடுத்து இறந்த காத்தலிங்கம் உடலை அடக்கம் செய்ய மார்பளவு தண்ணீரில் அவரது உறவினர்கள் பாடையை தோளில் சுமந்தபடி ஆபத்தான முறையில் ஓடையை கடந்து சென்று அடக்கம் செய்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த ஓடையின் அருகே பாதை இல்லை. யாரேனும் இறந்தால் ஓடையை கடந்து சென்றுதான் அடக்கம் செய்து வந்தோம். தற்போது ஓடையில் தண்ணீர் செல்வதால் தண்ணீரில் இறங்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இப்பகுதி மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஓடையின் குறுக்கே பாலம் அமைத்து தர தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்கான தீர்வு காண வேண்டும் என்றனர்.