விழுப்புரத்தில் பைக்ரேசில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது பைக்குகள் பறிமுதல்
விழுப்புரம், அக். 4: விழுப்புரத்தில் பைக்ரேசில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் நகரப்பகுதி மற்றும் புறவழிச்சாலைகளில் பைக்ரேஸ் நடப்பதாக வந்த புகாரின்பேரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி விழுப்புரம் தாலுகா காவல்நிலைய போலீசார் நடத்திய வாகன சோதனையில் கொட்டப்பாக்கத்துவேலி அருகே பைக்ரேசில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த முத்து(25) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து பைக்கினை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் முன்பு பைக்ரேசில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பவுல்(20) என்ற வாலிபரை கைது செய்து அவரிடமிருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீசார் பழைய அரசு மருத்துவமனை முன்பு நடத்திய வாகன சோதனையின்போது பைக்ரேசில் ஈடுபட்ட ஜிஆர்பிதெரு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன்(29) என்பவர் கைது செய்யப்பட்டு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. நகர காவல்நிலைய போலீசார் காந்திசிலைஅருகே நடத்திய வாகன சோதனையின்போது கோலியனூரை சேர்ந்த புஷ்பராஜ்(28) என்பவர் பைக்ரேசில் ஈடுபட்ட புகாரில் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்த பைக் பறிமுதல் செய்யப்பட்டது.