நாட்டிலேயே சிறந்த 10 காவல் நிலையங்கள் தேர்வு பாகூர் காவல் நிலையத்துக்கு 8வது இடம்
பாகூர் டிச. 3: நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் சிறந்த 10 காவல் நிலையங்களை ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு அறிவித்து வருகிறது. இந்த விருது குற்றங்களை கண்டறிதல், குற்றவாளிகளை விரைந்து கைது செய்தல், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல், விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுதல், சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுதல், குற்ற பதிவேடுகளை பராமரித்தல், புகார் அளிக்க வரும் பொதுமக்களை வரவேற்கும் முறை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சிறந்த 10 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் புதுச்சேரி மாநிலம் பாகூர் காவல் நிலையம் 8வது இடத்தை பிடித்துள்ளது.
சிறந்த காவல் நிலையமாக தேர்வாகியுள்ள பாகூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சஜித், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசாரை ஐஜி அஜித்குமார் சிங்லா பாராட்டினார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், இந்திய நாட்டில் 17,132 காவல் நிலையங்கள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் 10 சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுகின்றன. 80 வகைகளில் இந்த காவல் நிலையங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தால் ஆய்வு செய்யப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றன. இதில் 8வது இடத்தை பாகூர் காவல் நிலையம் பிடித்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றனர். கடந்த 2018ல் நெட்டப்பாக்கம் காவல் நிலையம் இந்திய அளவில் 4வது இடத்தை பிடித்திருந்தது. அதன் பிறகு தற்போது பாகூர் காவல் நிலையம் தேசிய அளவில் 8-வது இடத்தை பிடித்து புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளது.