விருத்தாசலத்தில் பரபரப்பு பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
விருத்தாசலம், டிச. 2: விருத்தாசலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு துறை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு விருத்தாசலம் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பத்திர பதிவு சம்பந்தப்பட்ட பணிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த அலுவலகத்தில் பத்திர பதிவு செய்வதற்கு அலுவலர்கள் முறைகேடாக பணம் அதிக அளவில் பெறுவதாகவும், அலுவலக நேரத்தை கடந்து இரவு நேரங்களில் பத்திர பதிவுகள் நடந்து வருவதாகவும், இடைத்தரகர்கள் மூலம் அதிக அளவில் பத்திர பதிவு நடைபெறுவதாகவும் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் சென்றது.
அதனைத் தொடர்ந்து நேற்று இரவு சுமார் 8 மணியளவில் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு அழகேசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் நுழைந்து திடீர் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து அலுவலகத்தை இழுத்து பூட்டி உள்ளே இருந்தவர்களை வெளியே விடாமலும், வெளியே இருந்தவர்களை உள்ளே விடாமலும் தடுக்கும் வகையில் போலீசார் பலத்த பாதுகாப்புடன் கணக்கில் வராத பணம் ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் அங்கு வந்த எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்களின் வாகனங்களின் சாவிகளை பறிமுதல் செய்து வாகனங்களின் பெட்டிகளில் ஏதேனும் பணம் இருக்கிறதா? முறைகேடான பரிமாற்றங்கள் குறித்த ஆவணங்கள் இருக்கிறதா, கணக்கில் வராத பணம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத பணம் ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டது.