திண்டிவனம் அருகே ஓட்டலில் ஐ.டி. பெண் ஊழியர் தவறவிட்ட நகையை போலீசார் மீட்டு ஒப்படைப்பு
திண்டிவனம், டிச. 2: திண்டிவனம் அருகே உணவகத்தில் தவறவிட்ட 18 சவரன் நகை மற்றும் லேப்டாப் ஆகியவற்றை போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர். சென்னை தாம்பரம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் மனைவி நளினி (28) ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை சென்னையில் இருந்து காரில் திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டின் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக காரில் புறப்பட்டு திண்டிவனம் வழியாக செல்லும் போது, சலாவதி கல்லூரி சாலை சந்திப்பில் உள்ள தனியார் உணவகத்தில் தேநீர் அருந்தியுள்ளனர். அப்போது அங்கிருந்து கிளம்பும்போது நளினி தான் கொண்டு வந்த பேக்கை அங்கேயே மறந்து வைத்துவிட்டு சென்றுள்ளார். அதில் 18 சவரன் நகைகள், லேப்டாப் இருந்துள்ளது.
இந்நிலையில் வீட்டிற்கு சென்று பார்த்த போது பேக்கை மறந்து வைத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து திண்டிவனம் ரோசணை காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்துள்ளனர். அதனையடுத்து நெடுஞ்சாலை ரோந்து உதவி ஆய்வாளர் மாணிக்கவாசகத்திற்கு போலீசார் தகவல் அளித்துள்ளனர். உடனடியாக உணவகத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு சோதனை செய்த போது நளினி வைத்து சென்ற பேக் அதே இடத்தில் இருந்துள்ளது. இதையடுத்து பேக்கை சோதனை செய்த போது அதில் 18 சவரன் நகை இருந்துள்ளது. இதனை தொடர்ந்து ரோசணை காவல் நிலையத்திற்கு வந்த நளினியிடம் 18 சவரன் நகை, லேப்டாப் பேக் ஆகியவற்றை போலீசார் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.