100 நாட்கள் வேலை வழங்க கோரி கிராம மக்கள் மறியல்
பாகூர், ஜூலை 1: ஏம்பலம் தொகுதி குடியிருப்புபாளையம் பகுதியில் உள்ள ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாகூர்-கரிக்கலாம்பாக்கம் சாலையில் அமர்ந்து நேற்று திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கரிக்கலாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 100 நாட்கள் வேலை வழங்காமல் மிகவும் சொற்ப நாட்களே வேலை வழங்குகின்றனர். புறவழிச் சாலையை கடந்து நீண்ட தூரம் சென்று கழிவு நீர் வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் வற்புறுத்தப்படுகின்றனர். ஆனால் அப்பகுதி கிராம மக்கள் தங்கள் பகுதியில் குடியிருப்பு பாளையம் கிராம மக்கள் வேலை செய்யக்கூடாது தடுக்கின்றனர்.
தங்கள் பகுதியில் 2 ஏரி, தாங்கல், குளம், பாசன வாய்க்கால்கள் ஏராளமாக இருக்கும் நிலையில் பக்கத்துக்கு கிராமத்துக்கு அழைத்து சென்று வேலை செய்ய சொல்கின்றனர். எனவே உள்ளூர் மக்களுக்கு தங்கள் கிராமத்திலே 100 நாள் வேலை வழங்க வேண்டும். இதற்கு அவர்கள் வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிலையில் போலீசார் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.