வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் புதுவையில் பிரபல தனியார் ஓட்டலை ஜப்தி செய்ய முயற்சி இருதரப்பு இடையே வாக்குவாதம்-பரபரப்பு
புதுச்சேரி, ஆக. 1: புதுச்சேரியில் கடந்த 2010ம் ஆண்டு தனியார் ஓட்டலின் உரிமையாளர், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.68 கோடிக்கு கடன் பெற்றுள்ளார். வெகுநாட்களாகியும் இந்த கடனை திரும்ப செலுத்தவில்லை. இந்த கடன் வட்டியுடன் சேர்த்து தற்போது ரூ.198 கோடி ரூபாயாக உயர்ந்ததாக கூறப்படுகிறது. ெதாடர்ந்து, உரிமையாளர் பணம் செலுத்தாததால் வங்கி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள பிரபல ஓட்டலுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி அலுவலர்கள் மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வக்கீல் பிரபாகரன் முன்னிலையில் ஜப்தி செய்ய நேற்று காலை சென்றனர். அப்போது, ஓட்டலின் பங்குதாரர்கள் ஜப்தி செய்ய விடாமல் நிறுத்தியதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் ஓட்டல் உரிமையாளர் மற்றும் வங்கி அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஆகஸ்ட் 4ம் தேதி வரை ஓட்டல் உரிமையாளர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.