திட்டங்களை ஆய்வு செய்ய வந்த ஒன்றிய குழுவிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
மங்கலம்பேட்டை, ஆக. 1: ஒன்றிய அரசின் நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக தேசிய ஆய்வு குழுவினர் ஆய்வாளர் பி.கே.குரியன், சங்கமித்ரா ஆகியோர் கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 29ம் தேதி கோட்டேரியிலும், 30ம் தேதி இருளக்குறிச்சியிலும், நேற்று கோ.மாவிடந்தல் கிராமத்திலும் அடுத்தடுத்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான அலுவலர்களும் பங்கேற்றனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி நினைவு குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை பார்வையிட்டனர். நேற்று கோ.மாவிடந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இக்குழுவினர் ஆய்வு நடத்தினர். இதற்காக இரவோடு இரவாக பள்ளி வளாகம் முழுவதும் முழுமையாக செயல்படுத்தப்படாத திட்டத்திற்கான தகவல் பலகை வைக்கப்பட்டிருப்பதாக பொதுமக்களில் சிலர், புகார் கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதேபோல் மேலும் சில இடங்களில் கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.