கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேப்பூர் குறுவட்ட அளவிலான கைப்பந்து, மேசைபந்து போட்டிகள்
குன்னம், ஜூலை 10: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேப்பூர் குறுவட்ட அளவிலான கைப்பந்து மற்றும் மேசைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. கிழுமத்தூர் மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் தாவுத் அலி தலைமையில் நடைபெற்ற இந்த போட்டிகளை, கீழப்பெரம்பலூர் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் பிரபாகரன் துவக்கி வைத்தனர். குறுவட்ட செயலர் அறிவேல், இணை செயலர் ஷீலா ஆகியோர் போட்டிகளை நடத்தினர்.
கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 14, 17, 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட கைப்பந்து மற்றும் மேசைப்பந்து போட்டிகளில் கீழப் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடமும், லப்பைக்குடிக்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடமும் பெற்று வெற்றி பெற்றனர்.
இந்த போட்டிகளில் திருமாந்துறை புனித ஆண்ட்ரூஸ் மேல்நிலைப்பள்ளி, கீழப்புலியூர் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, அந்தூர் செயிண்ட் பால்ஸ் மேல்நிலைப்பள்ளி, வேப்பூர், நன்னை, ஆடுதுறை, கீழப்பெரம்பலூர், கிழுமத்தூர் மாதிரி பள்ளி உட்பட பத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கபட்டது. நிகழ்ச்சியின் முடிவில் உடற்கல்வி ஆசிரியர் தட்சணாமூர்த்தி நன்றி கூறினார்.